இறால் வளர்ப்புக் குளங்களில் கார அமிலத் தன்மையின் தாக்கங்கள்!

3 hours ago 3

இன்றைய காலகட்டத்தில் கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் இறால்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. அதிலும் வெள்ளைக்கால் இறால் என்று சொல்லக்கூடிய லிட்டோபினேயஸ் வனாமி என்ற இறால் வகைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்தகைய வனாமி இறால்களை வளர்த்து அபரிமிதமான லாபம் பெற பண்ணையாளர்கள் சிறந்த வளர்ப்பு மேலாண்மை முறைகளை கையாள்வது அவசியம். வனாமி இறால் குளங்களில் என்னென்ன மாதிரியான மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என விளக்குகிறது இக்கட்டுரை.இறால் வளர்ப்புக்குளத்தில் நீரின் தர மேலாண்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இறால் வளர்ப்புக்கு குளங்களில் நீரின் தரம் பாதிக்கப்பட்டால் இறால்களுக்கு நோய் ஏற்படுதல், இறால்கள் உணவு எடுத்துக் கொள்வதில் மாற்றம், வளர்ச்சியின்மை மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து மடிதல் போன்றவை ஏற்பட்டு வளர்ப்புப் பருவமே தோல்வியைத் தழுவி பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும். நல்ல நீர்த்தரம் என்பது இறால் வளர்ப்புக் குளங்களில் உள்ள உயிர்வளி மற்றும் குறைந்த அளவான வளர்சிதை மாற்றக் காரணிகள் இருப்பதாகும். பல்வேறு நீர்த்தரக் காரணிகளான உயிர்வளி, கார அமிலத்தன்மை, வெப்பநிலை, நீரின் கடினத்தன்மை, உப்புத்தன்மை, நச்சு வாயுக்கள் (அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு) மற்றும் கலங்கல் தன்மை போன்றவைகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் மிகவும் முக்கியமான நீர்த்தரக் காரணியான பிஎச் என்று சொல்லக்கூடிய நீரின் கார-அமிலத்தன்மை என்ற வேதியக் காரணியானது குளத்து நீரின் வளத்தையும், இறால் வளர்ப்பில் அதிக உற்பத்திப் பெருக்கத்தினையும் நிர்ணயிக்கிறது.

அதிகப்படியான கார அமிலத்தன்மையை நீர்வாழ் உயிரினங்கள் நேரடிடையாக சந்திக்க நேரிடும்போது அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்பை சந்திக்க நேரிடும். கார அமிலத்தன்மையின் நேரடியான தாக்கத்தைக் காட்டிலும், எதிர்மறையான தாக்கம் அதிக நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளது. நீரினுள் கார அமிலத் தன்மையின் மாறுதலானது ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசம் ஆகிய இரு செயல்களின் தாக்கங்களினால் ஏற்படுகிறது. நீர்வாழ் உயிரினங்கள் சுவாசத்தின்போது கார்பன் டை ஆக்சைடை நீரினுள் வெளியிடுகிறது. அப்போது கார்பன் டை ஆக்சைடு நீருடன் வினைபுரிந்து கார்பானிக் அமிலத்தை உருவாக்குகிறது. பின்பு அவை ஹைட்ரஜன் அயனியாகவும், கார்பனேட் அயனியாகவும் மாறுகிறது. இவை பொதுவாக காரத்தின் பண்புடையவை. இவை நீர்மத்தில் மொத்த காரத்தன்மையை உருவாக்குகின்றன. அதிகாலை வேளையில் கார அமிலத்தன்மையின் அளவு குறைவாகவும், மதிய வேளைகளில் கார அமிலத்தன்மையின் அளவு அதிகமாகவும் காணப்படும்.

இறால் வளர்ப்புக் குளங்களில் கார அமிலத்தன்மை மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. இறால் வளர்ப்பிற்கான உகந்த கார அமில நிலை 7.5 முதல் 8.5 வரை என பரிந்துரைக்கப்படுகிறது. நீரின் தரத்தினை நிர்ணயிப்பதில் கார அமிலத்தின் ஏற்ற இறக்க அளவானது நடுநிலைத் தன்மையில் இருந்து 0.5 மிகாமல் இருத்தல் வேண்டும். உகந்த கார அமிலத் தன்மையின் அளவினையே தொடர்ந்து இருக்குமாறு வைத்திருத்தல் வேண்டும். இல்லையெனில் அவை இறால்களின் வளர்ச்சிதை மாற்றத்தையும், இயற்கை உடற்செயல்பாடுகளையும் பெரிதளவில் பாதிக்கும்.வளர்ப்புக் குளங்களில் கார அமிலத்தன்மை அளவில் மாறுதல்கள் ஏற்படக் காரணமான சூழ்நிலை காரணிகள்:
* அமிலத்தன்மையுள்ள மண்
* மழைநீரின் அளவு
* இறால்களின் இருப்பு நிலை
* நுண்ணுயிர்களின் பங்கேற்றம்
* தாவர மற்றும் விலங்கு நுண்ணுயிர் மிதவைகளின் பங்கேற்றம்
* குளத்தில் கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தியின் அளவு.கார அமிலத் தன்மையானது உகந்த அளவினை விட அதிகமாகவும், குறைவாகவும் இருக்குமெனில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
* வளரும் வேகம் குறைந்து, வளர்ச்சி நிறுத்தப்படுகிறது.
* பல்வேறு வகையான நோய்கள் வரக் காரணமாக அமைகிறது.
* அழுத்தத்தினையும், நெருக்கடியினையும் ஏற்படுத்துகிறது.
* பிழைப்புத்திறனைக் குறைக்கிறது.
* உற்பத்தி அளவினைக் குறைத்து பெரிதளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

வளர்ப்புக்குளங்களில் கார அமிலத்தன்மை மிகவும் குறையும் போதும், பிஎச் எண்ணிக்கை 10க்கு அதிகமாகும்போதும் இறால்களின் உயிரிழப்பு நிகழ்கிறது. எனவே இதை நாம் முறையாக கண்காணிப்பது அவசியம். அதற்குரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதும் அவசியம்.
– முனைவர். விஜய் அமிர்தராஜ்
உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர்
மீன்வளக்கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம்
தூத்துக்குடி.
தொடர்புக்கு: 99944 50248.

The post இறால் வளர்ப்புக் குளங்களில் கார அமிலத் தன்மையின் தாக்கங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article