இர்பான் செயல் மன்னிக்கக்கூடியது அல்ல.. கண்டிக்கக்கூடியது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 weeks ago 6

சென்னை,

பிரபல யூடியூபர் இர்பானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார். இதில் குறிப்பாக, குழந்தையின் தொப்புள் கொடியை இர்பானே வெட்டினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையானது. இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இர்பான் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது;

"குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். இர்பான் மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. இர்பானின் செயல் மன்னிக்கக்கூடியது அல்ல, கண்டிக்கக்கூடியது. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்" என்றார்.

 

Read Entire Article