இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது திருச்செந்தூர் யானை

2 hours ago 1

திருச்செந்தூர்: பாகன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. வழக்கம்போல சோறு, பழங்கள், ஓலைகள், புற்கள் முதலானவற்றை உண்டு வருகிறது. நேற்று வழக்கமான பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 18ம் தேதி தெய்வானை யானை பாகன் மற்றும் அவரது உறவினரை தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களும், உள்ளூர் மக்களும் யானை தாக்கிய சம்பவத்தை பரபரப்பாக பேசி வந்தனர். அது மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாருமே சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்பு யானை எங்குள்ளது என்பதை தூரத்தில் நின்று பார்த்து சென்றனர். இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பு மற்றும் அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கையால் யானை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம்போல காலையில் தனது தங்கும் இடத்திலேயே பாகனால் குளிப்பாட்டப்பட்டு சோறு, பழங்கள், ஓலைகள், புற்கள் முதலானவற்றை உண்டு வருகிறது.

யானை தாக்கிய சம்பவம் நிகழ்ந்து சரியாக ஒரு வார காலத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் முதல் திருச்செந்தூர் கோயிலுக்கு வழக்கமான பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல திருச்செந்தூர் கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தொடங்கி உள்ளனர். இதனால் யானை மட்டுமல்ல, கோயிலும் பக்தர்களின் வருகையால் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

வள்ளி கும்மிப்பாட்டு பாடி ஆடி அசத்திய பக்தர்கள்
திண்டுக்கல்லை சேர்ந்த கொங்கு வள்ளியம்மன் கும்மிப்பாட்டு குழுவை சேர்ந்த 65 பெண்கள் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து நேற்று கோயில் பழைய கலையரங்கம் பகுதியில் குழுவாக கும்மிப்பாட்டு பாடி நடனமாடி அசத்தினர். இதனை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். யானை தாக்குதல் சம்பவத்தால் மிகவும் அமைதியான சூழ்நிலையில் இருந்த திருச்செந்தூர் கோயிலில் நேற்று கும்மிப்பாட்டால் மனதிற்கு இதமாக சூழல் நிலவியதாக அதைப் பார்த்த பக்தர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர். அதேபோல் கோயில் வளாகத்தில் நேற்று மயில்கள் தோகை விரித்து ஆடியதைதையும் முருக பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் பார்த்து ரசித்தனர்.

The post இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது திருச்செந்தூர் யானை appeared first on Dinakaran.

Read Entire Article