
நெல்லை டவுண் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். நெல்லையின் முக்கிய அடையாளமாக இருட்டுக்கடை அல்வா திகழ்ந்து வருகிறது.
இந்த சூழலில் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் நெல்லையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா இன்று (புதன்கிழமை) தனது தாயுடன் வருகை தந்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கவிதா கூறுகையில், "'எனது மகளுக்கு தாலி கட்டிய அடுத்த நொடியில் இருந்தே மணமகன் வீட்டினர் வரதட்சணை கொடுமை செய்து வருகின்றனர். பணம் மற்றும் நகை அதிக அளவு கேட்டு மிரட்டல் விடுத்தனர். எனது மகளின் மாமனாரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார். எனது மகளின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணை கோவையில் உள்ள வீட்டிற்கே அழைத்து வருகிறார். இதன் மூலம் கணவருடன் தினமும் சண்டை ஏற்பட்டது. எங்களது புகழ் பெற்ற இருட்டுக்கடையை தனது பெயருக்கு மாற்றிக் கொடுத்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும் என்று மிரட்டுகிறார்.
வரதட்சணை கொடுமை அதிகமானதால் மார்ச் 15 ஆம் தேதி கோவையில் இருந்து எனது மகள் நெல்லை திரும்பி விட்ட நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். சொந்தக்காரர்கள் தான். இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை. இது குறித்து மாமனாரிடம் கேட்டால் எனக்கு கட்சியில் செல்வாக்கு உள்ளது. எல்லா அதிகாரிகளும் எனக்கு உதவி செய்வார்கள் என்று மிரட்டுகிறார். போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த பின்னரும் மிரட்டுகிறார். திரும்பத் திரும்ப எங்களுடைய வாழ்வாதாரமான கடையில் கை வைக்க பார்க்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தநிலையில், அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங்கின் தந்தை யுவராங் சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இருட்டுகடையை வரதட்சணையாக நாங்கள் கேட்கவில்லை. வரதட்சணை வாங்காமல்தான் திருமணமே செய்தோம். அந்த குடும்பம் அதிகப்படியான கடன் சுமையில் உள்ளது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அவர்கள் பெயருக்கே, இருட்டு கடை தற்போதுதான் வந்தது. இருட்டுக்கடையின் முந்தைய உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக உறவினர்களே குற்றம் சாட்டி இருந்தனர். எங்கே இருட்டுக்கடை முறைகேடாக எழுதிவாங்கப்பட்டது வெளியில் வந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொய் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட அந்த கார் கூட கனிஷ்காவின் பெயரில் தான் உள்ளது. ஒரு ரூபாய் கூட வரதட்சணையாக வாங்கவில்லை. கனிஷ்காவிற்கு 3 முறை திருமணம் நிச்சயக்கப்பட்டு நின்றுபோனது. தங்கள் மகள் குறித்த விஷயங்கள் வெளியே தெரிந்துவிடுமோ என்பதால் அவர்கள் இந்த பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்" என்று கூறினார்.