புதுடெல்லி: டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம் என்றும், இனிமேல் 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று வாகன நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் என்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2022ம் ஆண்டு நடந்த சுமார் 1.5 லட்சம் விபத்துகளில், கிட்டத்தட்ட 20% விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், திடீரென பிரேக் பிடிக்கும்போது வாகனத்தின் சக்கரங்கள் நின்று விடுவதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுவதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும், காயங்களையும் தடுப்பதற்குப் பாதுகாப்பான தொழில்நுட்பங்களின் தேவை நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. இத்தகைய விபத்துகளைக் குறைத்து, ஓட்டுநர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒன்றிய போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும், அவற்றின் இன்ஜின் திறனைக் கருத்தில் கொள்ளாமல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், இனிமேல் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கும் போது, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இரண்டு ஹெல்மெட்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள், இருசக்கர வாகனப் பயணத்தை முன்பை விடப் பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post இருசக்கர வாகனங்களுக்கு ‘ஏபிஎஸ்’ கட்டாயம்; டூவீலர் வாங்கினால் 2 ஹெல்மெட் இலவசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.