இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு மகாராஷ்டிரா 62%, ஜார்க்கண்ட் 68%: 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை

1 month ago 4

மும்பை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. ஒரே கட்டமாக தேர்தல் நடந்த மகாராஷ்டிராவில் 62 சதவீத வாக்குகளும், ஜார்க்கண்டில் 68 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் முதல் கட்டமாக 43 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்டில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாகவும், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் நேற்று தேர்தல் நடந்தது.

மகாராஷ்டிராவில் பாஜ, ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கொண்ட மகாயுதி கூட்டணியும், உத்தவ் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் கட்சிகளை கொண்ட மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியிடுகின்றன. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

மும்பையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவரவர் தொகுதிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கொலாபாவில் வாக்களித்தார். முதல்வர் ஷிண்டே தனது குடும்பத்துடன் தானேவில் உள்ள கோப்ரி-பச்பகாடி தொகுதியில் வாக்குப்பதிவு செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான அஜித்பவார் தனது மனைவி சுனேத்ரா பவாருடன் வந்து பாராமதியில் கடேவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். துணை முதல்வர் பட்நவிஸ் நாக்பூரில் தனது குடும்பத்துடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினார்.

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் டவுன்ஹால் பகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே போல உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையிலும், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சித் தலைவர் சரத்பவார் பாராமதியிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர்கள், அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலரும் அவரவர் தொகுதிகளில் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்களும் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மாநிலம் முழுவதும் தேர்தல் சுமூகமாக நடந்த போதிலும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் பிரச்னை எழுந்தது.

நாசிக்கில் நந்த்காவ் தொகுதிக்கு உட்பட்ட 164வது வாக்குச்சாவடியில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாமல் போனது. விரல்களில் மை வைக்கப்பட்ட பிறகும் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டு ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பார்லி தொகுதியில் சரத்பவார் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் மாதவ் ஜாதவ் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒரு கும்பல் கட்நாந்தூரில் உள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்து சூறையாடியது. வாக்கு இயந்திரங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

உடனடியாக அந்த இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு செய்யும் பணிகள் தொடந்தன. அந்த கும்பல் அடித்து நொறுக்கிய இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஓட்டு எண்ணும் போது அந்த வாக்குகளும் எண்ணப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில், 62 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் 38 தொகுதிகளில் 528 வேட்பாளர்கள் களமிறங்கினர். மொத்தம் 14,218 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் போட்டியிட்ட பர்ஹைத், அவரது மனைவி கல்பனா சோரன் போட்டியிட்ட கண்டே தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. ‘பொன்னான ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதில், 2ம் கட்ட தேர்தல் முக்கிய பங்கு வகிக்கும். ஜார்க்கண்டுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு சரியான பதிலடி தரப்படும்’ என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். மாலை 5 மணி நிலவரப்படி மாநிலத்தில் 68 சதவீத ஓட்டுகள் பதிவானதாகவும், தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரு மாநிலத்திலும் நேற்றுடன் தேர்தல் நிறைவடைந்த நிலையில், வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

* ஓட்டு போட படையெடுத்த பாலிவுட் நட்சத்திரங்கள்
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு போட மும்பையில் நேற்று பாலிவுட் நட்சத்திரங்கள் படையெடுத்து வந்தனர். ஓட்டு போட்ட அவர்கள், ‘மக்கள் அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தினர். பாலிவுட்டின் பாதுஷா என புகழப்படும் ஷாரூக்கான் தனது மனைவி கவுரிகான், மகன் ஆர்யன் கான், மகள் சுஹானாவுடன் மாலையில் வந்து வாக்களித்தார். இதே போல மாலை 4.45 மணிக்கு சல்மான் கான் தனது தந்தையும் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான், சகோதரர்கள் அர்பாஸ் மற்றும் சோஹைல் உள்ளிட்டோருடன் பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார்.

நடிகர்கள் அக்ஷய் குமார், ராஜ்குமார் ராவ், நடிகரும் இயக்குநருமான பர்கான் அக்தர், அவரது சகோதரி ஜோயா அக்தர், நடிகை கரீனா கபூர், அவரது கணவர் சைப் அலிகான், ஷ்ரத்தா கபூர், கார்த்திக் ஆர்யன், மாதுரி தீட்சித், கோவிந்தா, ஊர்மிளா மடோன்கர், ஜான் ஆபிரகாம், அனன்யா பாண்டே, சோனாலி பிந்த்ரே, சோனுசூட் உள்ளிட்டோர் வாக்களித்தனர். மூத்த நடிகர் அனுபம் கேர் வாக்களித்த பின் அளித்த பேட்டியில், முதல்முறை வாக்காளர்கள் ஓட்டு போட வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். நடிகரும் பாஜ எம்பியுமான ஹேமா மாலினி, வாக்களிப்பது மக்களின் உரிமையும் கடமையும் கூட என்றார். ரித்தேஷ் தேஷ்முக், அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பாபல்கானில் வாக்களித்தனர்.

* தொழுநோயாளிகளின் சிறப்பு வாக்குச்சாவடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிஹிஜாமில் உள்ள சினேபூர் சமுதாய கட்டிடத்தில் தொழுநோயாளிகளுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் தொழுநோயாளிகள் வாழும் காலனி உள்ளது. அக்காலனியை சேர்ந்த 57 தொழுநோயாளிகள் சிறப்பு வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். அதன்படி, முதல் முறையாக அவர்கள் தங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர். வாக்களித்த தொழுநோயாளிகள், ‘‘மாவட்ட நிர்வாகம் முதல் முறையாக எங்களுக்காக பிரத்யேக வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக எங்களால் வாக்களிக்க முடிந்தது. ஆக்கப்பூர்வமான ஆட்சி அமைய எங்களின் வாக்குகள் உதவும் என நம்புகிறோம்’’ என்றனர்.

* 15 தொகுதிகளில் இடைத்தேர்தல்
உபியில் 9 சட்டப்பேரவை தொகுதிகள் உட்பட 4 மாநிலங்களில் மொத்தம் 15 தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. ஏற்கனவே கடந்த 13ம் தேதி வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பல்வேறு மாநிலங்களில் 31 சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் நடந்தது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் 2 மக்களவை தொகுதிக்கும், 46 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

The post இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு மகாராஷ்டிரா 62%, ஜார்க்கண்ட் 68%: 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article