திருச்சி, ஜன.29: திருச்சியில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார் கவனத்துடன் இருக்க வேண்டும் என துணை கமிஷனர் ஈஸ்வரன், ரோந்து போலீசாருக்கு நேற்று இரவு நடந்த திடீர் ஆய்வின்போது ஆலோசனைகள் வழங்கினார். திருச்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிபறி, செயின் பறிப்பு, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த இரவு போலீசாருக்கு போலீஸ் துறையின் உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
மாநகரத்தின் அனைத்து தெருக்கள், கடை வீதிகள், வங்கிகள், தனியார் அடகு நிறுவனங்கள், ஏடிஎம்க்கள் ஆகியவை அமைந்திருக்கும் பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாதபடி காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏடிஎம் செக்யூரிட்டிகள் இரவு நேரங்களில் துாங்கி விடாதபடி அவ்வப்போது அவர்களை விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு, ரோந்து போலீசாரின் செயல்பாடுகள் குறித்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அனைவரையும் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஒருங்கிணைத்த, போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ரோந்து போலீசாருடன் கலந்துரையாடினார். இரவு ரோந்து பணியின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு நுணுக்கங்கள் குறித்து போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் இரவு நேர குற்றங்கள் ஏதும் நடைபெறாதபடி மாநகர மக்களை காக்கும் பொறுப்பு இரவு ரோந்து போலீசாருக்கு உள்ளதை நினவு கூர்ந்து, கவனத்துடன் செயலாற்ற அறிவுறுத்தினார்.
The post இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் துணை கமிஷனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.