சென்னை: ஊத்துக்கோட்டை அருகே, கிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் உறிஞ்சும் ஆந்திர விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர், இதனையடுத்து, தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மாதம் 28ம் தேதி வந்தடைந்தது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் கூடுதலாக 300 கன அடி வீதம் 800 கன அடியாகவும், தற்போது, 1320 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு நேற்று பிற்பகல் 290 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் அருகே ஆந்திர பகுதியான கண்டிகை, ஆம்பாக்கம், சிறுவனம்புதூர், மதனம்பேடு, மதனஞ்சேரி ஆகிய பகுதிகளில் ஆந்திர விவசாயிகள் ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீரை இரவு பகல் பாராமல் உறிஞ்சி நாற்று நடவும், பயிர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தகூடாது என அதிகாரிகள் தெரிவித்தும், ஆந்திர விவசாயிகள் இதை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக ஜீரோ பாயிண்டில் தண்ணீர் குறைந்து வருகிறது. எனவே, ஆந்திர விவசாயிகள் தண்ணீர் உறிஞ்சுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post இரவு பகல் பாராமல் ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாய் தண்ணீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.