இரவில் ஒளிர்ந்த கடல்!

3 months ago 13

சென்னை மற்றும் புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பலர், கடலில் குளித்தும், கால் நனைத்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரவு 9.15 மணியளவில் கடலில் திடீரென நீல நிறத்தில் கடல் அலைகள் ஒளிர்ந்தன. கடல் பகுதியில் இந்த காட்சி தென்பட்டது. இதனை பலரும் பார்த்து வியந்தனர். குறிப்பாக அலை அடிக்கும் போது, கடலில் அசைவுகள் உண்டாகும் போது இந்த நீல நிற ஒளிர்வைக் காண முடிந்தது. பொது மக்கள் தங்களது செல்போன்களில் இந்த காட்சியை படம் எடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் இதேபோல் நீல நிறத்தில் கடல் அலைகள் ஒளிர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையின் நீலாங்கரை, திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை சாலையோரக் கடல் பகுதிகளில் இந்த நீல நிற ஒளிர்வைக் கண்டுகளித்துள்ளனர். இதுகுறித்து கடல் வாழ் உயிரியியல் குழு கூறுகையில், கடலில் வாழும் ஒரு செல் உயிரியான ‘டைனோ ப்ளாச்சுலேட்’ வகையை சேர்ந்த ‘நாட்டிலுக்கா சின்டிலன்ஸ்’ எனும் மிதவை நுண்ணுயிரியால் கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது. இதனை ‘சீ பார்க்கல்ஸ்’ அல்லது கடல் பொறி என அழைக்கப்பர். இந்த மிதவை நுண்ணுயிரி, கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் உணவு ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, இருளில் ஒளி வீசி ஜொலிக்கிறது. இந்த நுண்ணுயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது ஒளி வெளியாகிறது. அப்போது அந்த பகுதியின் அலை ‘புளோரசன்ட் நீல’ நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வை பயோலுமினெசென்ஸ் என அழைக்கப்படுகிறது என்றார். மேலும் இவை அந்தமான், கேரளாவின் சில பகுதிகள், கோவா உள்ளிட்ட பகுதிகளில் வருடந்தோறும் தென்படுவது வழக்கம். அதிலும் அக்டோபர் மாதம் இவைகள் வருவது வழக்கம். தற்போது சென்னை மற்றும் புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த நீல நிற கடல் ஒளிர்வு நிகழ்ந்திருக்கிறது. இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் என எங்கும் வைரலாக இருந்தன.

 

The post இரவில் ஒளிர்ந்த கடல்! appeared first on Dinakaran.

Read Entire Article