தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கலசப்பாக்கம் சரவணன் (திமுக) பேசுகையில், ‘‘கடந்த காலத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்ட அரிசி கோழிகளுக்கும், மாடுகளுக்கும் வழங்கப்பட்ட அளவிலான அரிசியாக இருந்தன. அதை மாற்றி, திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுக்கு மிகவும் தரமான அரிசி வழங்கப்படுகிறது’’ என்றார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் பேச வாய்ப்பு கேட்டனர். அதற்கு சபாநாயகர் அமைச்சர்களின் பதிலுரைக்கு பிறகு தருவதாக கூறினார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:
சபாநாயகர் அப்பாவு: அனைத்து உறுப்பினர்களும் பேசி முடித்தாகிவிட்டது. உறுப்பினர்களான காமராஜ், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால், அமைச்சர்கள் பதிலுரையாற்றிய பிறகு, உங்கள் இருவருக்கும் வாய்ப்புத் தருகிறேன். காமராஜ் (அதிமுக): ஆளுங்கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசும் போது, கடந்த ஆட்சிக் காலத்தில் அரிசியை கோழிகளுக்கும், மாடுகளுக்கும் போட்டார்கள். இந்த ஆட்சியில் சிறப்பான அரிசி கிடைக்கிறது என்று சொன்னார்.
அமைச்சர் துரைமுருகன்: இதைப் பற்றி பேசி ஒரு ஆண்டு ஆகிறது. நானே சொல்கிறேன். உங்கள் ஆட்சியில் நியாய விலை கடையில் அரிசியை வாங்கி நானே கோழிக்கு போட்டிருக்கிறேன். இத்துடன் விட்டுவிடுங்கள். அமைச்சர் பேசி முடித்தவுடன், வாய்ப்பு கொடுக்க சொல்கிறேன். என் மீது நம்பிக்கையிருந்தால் உட்காருங்கள், இல்லையென்றால் சென்று விடுங்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
The post இரண்டாவது முறையாக அதிமுக வெளிநடப்பு ஏன்..? அதிமுக ஆட்சியில் வழங்கிய ரேஷன் அரிசி தரமில்லை: திமுக-அதிமுக காரசார விவாதம் appeared first on Dinakaran.