புதுடெல்லி: அமெரிக்க அதிபர் பதவியேற்ற பிறகு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் ஜன.20ல் பதவியேற்றார். அப்போது சீனா, ரஷ்யா அதிபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதே போல் பிரதமர் மோடியும், புதிதாக பதவியேற்ற டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவு செய்தார். இந்த நிலையில் டிரம்ப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி நேற்று அவருடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது பிரதமர் மோடி தனது அன்புள்ள நண்பருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். டிரம்ப் தற்போது பதவியேற்ற உடனேயே அமெரிக்க குடியுரிமை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை மாற்றி அமைக்க தொடங்கி உள்ளார். எச்1பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு, அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வ குடியேற்றம் செய்தவர்கள் தவிர மற்றவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.
இந்த சூழலில் டிரம்ப்-மோடி பேச்சு மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் தனது குடிமக்களை இந்தியா திரும்பப் பெறத் தயாராக உள்ளது என்று வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த பின்னர் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறினார்.
இந்த பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,’ எனது அன்பு நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். இந்தியா, அமெரிக்கா இடையே பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இரண்டாம் முறையாக பதவி ஏற்ற அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி போனில் பேச்சு appeared first on Dinakaran.