இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முகாந்திரம் இல்லாத கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு

3 weeks ago 5

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் முகாந்திரம் இல்லாமல் சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பதில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை. குறிப்பாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அப்படி இருக்கும்போது சூர்யமூர்த்தி கடந்த 2013ல் உள்ள உறுப்பினர் அட்டை எண்ணை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அது ஏற்புடையது கிடையாது. ஏனெனில் அந்த ஆண்டுக்கு பின்னர் அவர் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை. எனவே அவர் கட்சியின் உறுப்பினர் கிடையாது. சூர்யமூர்த்தி, அதிமுகவுக்கு எதிராக வேறு ஒரு கட்சியின் (எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி) சார்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். இவரை போன்றவர்களால் முகாந்திராம் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கவோஅல்லது அந்த மனுவுக்கு விளக்கம் கேட்டிருக்கவோ கூடாது.

சூர்யமூர்த்தியை பொருத்தமட்டில் அதிமுகவுக்கு எதிராக வழக்கு தொடுப்பது புதியது கிடையாது. ஏற்கனவே இவர் தாக்கல் செய்துள்ள வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உகந்தது கிடையாது என்று தெரிவித்து கடந்த 2021ம் ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. மேலும் கட்சியின் உள்விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது. இதனை நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளது. அதேப்போன்று கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக இந்த மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையும் கிடையாது என்பதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முகாந்திரம் இல்லாத கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு appeared first on Dinakaran.

Read Entire Article