இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்கூட்டியே அறிய செயலி: கலெக்டர் தகவல்

3 months ago 15

திருவள்ளூர்: இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்கூட்டியே அதிகாரபூர்வமான தகவல்களை அறிய செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளும்படி கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் கைப்பேசி மூலம் அறிந்துகொள்ள டிஎன் -அலெர்ட் (TN-ALERT) என்னும் செயலியை கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் தங்கள் பகுதியில் நிலவும் வானிலை அறிக்கை, மழையளவு விவரம், செயற்கைக்கோள் புகைப்படங்கள், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் வரைபடங்கள், புயல், கனமழை, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், தீ, இடி, மின்னல் போன்ற பேரிடர்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தகவல்கள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் விவரம், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் ஆபத்திற்கான எச்சரிக்கை விவரம், பேரிடர் தொடர்பான புகார் அளிக்கும் வசதி, பேரிடர் தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா உதவி எண்கள், மாநில கட்டுப்பாட்டு அறை 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்.1077 ஆகியவற்றை இதன்மூலம் அறியலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் டிஎன் அலெர்ட் என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்கூட்டியே அறிய செயலி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article