உடுமலை: அமராவதி சர்க்கரை ஆலை இயந்திரங்களின் பழுது நீக்கி, புதுப்பித்து இயக்கிட ரூ.166 கோடி தேவை. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரிசாராய உற்பத்தி துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொத்தானை அழுத்தி எரிசாராய உற்பத்தியை துவக்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய உத்தரவின்படி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து 2726.960 மெட்ரிக் டன் கழிவுப்பாகு கொள்முதல் செய்ய உத்தரவு பெறப்பட்டது.
அதன்படி, அரூர் சுப்பிரமணி சிவா, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா, திருப்பத்துார் சர்க்கரை ஆலைகளிலிருந்து மொத்தம் 2708.370 மெ.டன் கழிவுப்பாகு கொள்முதல் செய்யப்பட்டது. இவற்றிலிருந்து வடிப்பாலை பிரிவில் எரிசாராய உற்பத்தி தொடங்கியுள்ளது. 3507 டன் கழிவுப்பாகிலிருந்து 7,89,075 லிட்டர் எரிசாராயமும், 7,54,005 லிட்டர் எத்தனாலும் உற்பத்தி செய்யப்படவேண்டும். இந்த உற்பத்திக்கு தேவையான பார்ச்சூன் ஆயில் கொள்முதல் செய்ய சர்க்கரை இணையத்திலிருந்து கடனாக ரூ.30 லட்சம் பெறப்பட்டுள்ளது.
இந்த எரிசாராயம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் சென்னை மூலமாக விற்பனை செய்யப்படும் போது, கழிவுப்பாகு கொள்முதல் செய்த தொகை மற்றும் பார்ச்சூன் ஆயில் தொகை பிடித்தம் செய்யப்பட்டு விடும். மேலும் சர்க்கரை துறை ஆணையர் உத்தரவின்படி பழைய கடன்களுக்கு எரிசாராய விற்பனை 90 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 10 சதவீதம் மட்டுமே அமராவதி சர்க்கரை ஆலைக்கு வழங்கப்படும். மேலும், இவ்வாலையில் உற்பத்தி செய்யப்படும் எத்தனால், பிபிசிஎல் மற்றும் ஓசிஎல் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி
மூலம் வழங்கி அதன் மூலம் கிடைக்கும் தொகைஅமராவதி சர்க்கரை ஆலைக்கு கிடைக்கும். 1961-ல் துவங்கப்பட்ட சர்க்கரை ஆலையின் இயந்திரங்கள் 2023 ஜூலை முதல் பழுதுபட்டதன் காரணமாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆலையை மீண்டும் இயக்கிட ரூ.166 கோடி தேவைப்படுகிறது. இது அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக திட்டமிட்டு பணியை மேற்கொண்டு மீண்டும் அரவை பணிகளை துவங்கும் சூழ்நிலை உருவாக்கப்படும். இவ்வாறு கூறினார்.
The post இயந்திரங்களின் பழுதை நீக்கி அமராவதி சர்க்கரை ஆலையை இயக்க ரூ.166 கோடி தேவை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.