சென்னை: தனது தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனத்திற்கு ரூ.3,800 கோடி பணம் பரிமாற்றம் செய்த விவகாரத்தில் சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ.912 கோடி பணத்தை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம், ஆர்.கே.எம். பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்திற்கு கனரக இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதற்காக ரூ.3,800 கோடி அளவுக்கு இவரது நிறுவனம் சார்பில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சிபிஐ ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே சிபிஐ அளித்த தகவலின் படி, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனியாக விசாரணை நடத்தினர்.
அதில் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் வாங்க சட்டவிரோதமாக ரூ.3,800 கோடி பணம் மாற்றியது தெரியவந்தது. மேலும், நிறுவனத்தின் பங்கு நிர்ணயத்தில் வெளிப்படத்தன்மை இல்லாமல் மோசடியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.1,800 கோடி ஆர்.கே.எம். நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த பணத்தில் முறையாக ஒன்றிய அரசுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்றும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ஆண்டாள் ஆறுமுகத்திற்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சட்டவிரோத பணம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள், வெளிநாட்டு பங்கு முதலீட்டு ஆணங்கள் என ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தது. அதோடு இல்லாமல் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.912 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
The post இயந்திர இறக்குமதிக்காக ரூ.3,800 கோடி பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் சென்னை தொழிலதிபரின் ரூ.1000 கோடி சொத்து, ரூ.912 கோடி பணம் முடக்கம்: அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.