
சென்னை,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்சியூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வகைகளில் அடங்கும். தற்போது, ரஜினி படத்துக்குப் பிறகு எல்சியூ கதைகளை இயக்குவதாகக் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக 'பென்ஸ்' படம் உருவாகிறது. இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 'பென்ஸ்' படமும் எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் சாயலில் இடம் பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், எல்சியூ குறித்த ஒரு குறும்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாடு தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த எல்சியூ யூனிவர்ஸ் உருவாதற்கு முன் என்ன நடந்தது, இது எப்படி உருவானது என தெரிவிக்கும் வகையில் லோகேஷ் ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு சாப்டர் ஜீரோ என பெயரிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் 1 ஷாட், 2 கதைகள், 24 மணிநேரம் என இடம்பெற்றுள்ளது. இந்த குறும்படத்தின் நீளம் 10 நிமிடத்திற்குள் இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.