
எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
6-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஆயில் 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் அணியை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்தது. அந்த அணி இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கையிலேயே அரையிறுதியை உறுதி செய்தது. இந்தியன் ஆயில் அணியில் குர்ஜிந்தர் சிங், சுமித் குமார் தலா ஒரு கோலடித்தனர். மலேசிய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே 6-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணியை பந்தாடி தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றதுடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. ரெயில்வே அணியில் குர்சகிப்ஜித் சிங், பங்கஜ் ரவாத் தலா 2 கோலும், சிம்ரன்ஜோத் சிங், ஷிவம் ஆனந்த் தலா ஒரு கோலும் போட்டனர். ஒரு வெற்றி, 2 டிரா கண்டிருந்த தமிழக அணிக்கு விழுந்த முதல் அடி இதுவாகும்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் மத்திய நேரடி வரிகள் வாரியம்-இந்திய கடற்படை (பிற்பகல் 2.30 மணி), இந்திய ராணுவம்-மராட்டியம் (மாலை 4.15 மணி), கர்நாடகா-மலேசியா ஜூனியர் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.