
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் இந்த வருடத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வருவாய், தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி இன்று கூறும்போது, இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர் என கூறியுள்ளார்.
இதனால் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிய பாலங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார்.
இதனால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.