
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் அதிரடியாக பேட்டிங் செய்வதை மட்டுமே மையமாக வைத்து விளையாடினால் ஐதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். அவர்களின் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நிச்சயமாக, ஐதராபாத் அணியின் பேட்டிங் திறன் மற்றும் அவர்கள் அடிக்கும் மிகப்பெரிய ஸ்கோர்களைப் பற்றி நாம் பேசுகிறோம். அதே சமயம் அவர்களது பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் ரோடு போன்ற பிட்ச்சில் பந்து வீசுகிறார்கள்.
கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் முதல் ஆட்டத்தில் அவர் 60 ரன்கள் வழங்கினார். ஜம்பா பந்து இந்த போட்டியில் அடித்து நொறுக்கப்பட்டது. ஷமி ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் வீதம் கொடுக்கிறார். எனவே நீங்கள் உங்கள் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் திடீரென ஒரு நாள் அவர்களிடம் இங்கு அசத்துவதற்கான முழுமையான தன்னம்பிக்கை இல்லாமல் போகலாம்.
உண்மையில் ஐதராபாத் ஒரே ஸ்டைலில் விளையாடுவது எனக்கு கவலையாக இருக்கிறது. அனைத்து நேரங்களிலும் உங்களால் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை விளையாட முடியாது. இன்று அந்த அணுகுமுறையை பின்பற்றியே அவர்கள் வீழ்ந்தனர். இப்படி விளையாடுவதற்கு பதிலாக கொஞ்சம் சாதுரியமாக செயல்பட்டு 220 - 230 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் அல்லவா? இந்த உலகில் நடைபெறும் அனைத்துத் தொடர்களிலும் எந்த அணியும் ஒரே ஸ்டைலில் விளையாடி கோப்பையை வென்றதை நான் பார்த்ததில்லை" என்று கூறினார்.