இன்றும், நாளையும் கள ஆய்வு விருதுநகரில் முதல்வர் இன்று பிரமாண்ட ரோடுஷோ: பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்

1 week ago 3

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கள ஆய்வு செய்வதற்காக செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கி.மீ தூரம் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த உள்ளார். பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து குறைகளையும் கேட்கிறார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்துகிறார்.

அதன்படி கடந்த 5ம் தேதி கோவையில் இருந்து கள ஆய்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நில விடுப்பு ஆணை மூலம் 35 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு தந்தார். தங்க நகை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் மற்றும் 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மேலும் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் கோவையில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்காவை ஆய்வு செய்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக விருதுநகரில் இன்றும், நாளையும் கள ஆய்வு நடத்து உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் செல்லும் முதலமைச்சருக்கு, பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை முன்பு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவேற்புக்கு பின் கன்னிசேரி புதூரில் உள்ள ஆலையில் பட்டாசு உற்பத்தியை பார்வையிட்டு தொழிலாளர்களை சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

அதன் பின் சூலக்கரையில் உள்ள சத்யா குழந்தைகள் இல்லத்திற்கு சென்று குழந்தைகளிடம் பேசுகிறார். பின்னர் ராம்கோ மாளிகை செல்கிறார். மாலை 4 மணிக்கு ராமமூர்த்தி ரோட்டில் உள்ள கந்தசாமி மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் விருதுநகர் புதிய பஸ் நிலையம் வழியாக ராம்கோ விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் ஒரு கி.மீ தூரம் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

சமீபத்தில் கோவைக்கு கள ஆய்வு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்லும் போது வழிநெடுகிலும் மக்கள், தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பால 4 கிலோ மீட்டர் தூரம் கடக்க 1 மணி நேரமானது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘கோவை மக்களின் அன்பில் நெகிழ்ந்தேன்’ என்று கூறி இருந்தார். மக்களின் வரவேற்பால் விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்த உள்ளார்.

நாளை (நவ. 10) காலை 9 மணியளவில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.77.11 கோடி மதிப்பிலான புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்பட ரூ.100 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அதன்பின் ஆர்.ஆர்.நகர் அருகே பட்டம்புதூரில் நடைபெறும் விழாவில் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் 40,148 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குகிறார். 16,852 பேருக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதன்பின் மதுரை விமான நிலையம் சென்று சென்னை வருகிறார்.

The post இன்றும், நாளையும் கள ஆய்வு விருதுநகரில் முதல்வர் இன்று பிரமாண்ட ரோடுஷோ: பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article