சக்தியை கவுரி என்ற வடிவில் வழிபடும் விரத முறையே கவுரி விரதம் ஆகும். கவுரி விரதம் என்றதும் முதன்மையான கேதார கவுரி விரதமே நினைவுக்கு வரும். ஆனால் இந்த கவுரி விரதங்களில் பல்வேறு விரத தினங்கள் காணப்படுகின்றன. அதில் கவுரி தேவிக்கு உரிய ஒரு விரதம் திரைலோக்கிய விரதம் ஆகும்.
அவ்வகையில் இன்று வெள்ளிக்கிழமை (24.1.2025) திரைலோக்கிய விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தை பெண்கள் இருந்தால், அளவற்ற பயன்கள் பெறலாம். குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் நம்பிக்கை.
கவுரி தேவியை நினைத்து இன்று விரதம் இருக்கும் பெண்கள், இன்று இரவு வீட்டில் கலசம் அமைத்து கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம். கலசம் அருகே 16 விளக்குகள் ஏற்றி வைத்து ஆராதனை செய்து வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும். திருமண வயதில் உள்ள பெண்கள் இன்றிரவு கவுரியை மனமுருகி வழிபட்டால் நிச்சயம் விரைவில் கல்யாணம் கைகூடும், நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
வீட்டில் கவுரி பூஜை செய்து முடிந்ததும், அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்து ஆசி பெறலாம். இது வீட்டில் செல்வ கடாட்சம் ஏற்பட செய்யும் என்று நம்பப்படுகிறது.