இன்று கனமழை, புயல் எச்சரிக்கை குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுமா? பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

1 month ago 4

சென்னை: கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக, இன்றும், நாளையும் சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் குறித்து, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகி, நாளை சென்னை அருகே மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை விமான நிலையத்தில் நடந்தது. கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும், வானிலை அறிக்கைகளின் அடிப்படையில், விமான சேவைகளை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பலத்த காற்று வீசுகின்ற நேரத்தில், ஏடிஆர் எனப்படும், சிறிய ரக விமானங்கள் வானில் பறப்பது பாதுகாப்பானது இல்லை என்பதால், அந்த ஏடிஆர் ரக விமானங்களை இயக்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, சேலம், திருச்சி, மதுரை மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏடிஆர் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அந்த விமானங்கள், இன்றும், நாளையும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், அந்த விமானங்கள் இயக்குவதை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்றும், நாளையும் சென்னையில் இருந்து விமானங்கள் புறப்படுவது, அதைப்போல் சென்னைக்கு விமானங்கள் வந்து சேர்வது போன்றவைகளை பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தாங்கள் பயணிக்க இருக்கும் விமானங்கள் நிலை என்ன, குறித்த நேரத்தில் இயக்கப்படுகிறதா, தாமதமாக இயக்கப்படுகிறதா, இல்லையேல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறதா என்ற விவரங்களை கேட்டுக் கொண்டு, அதற்கு ஏற்ப தங்களுடைய பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

The post இன்று கனமழை, புயல் எச்சரிக்கை குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுமா? பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article