இன்று உலகளாவிய விழிப்புணர்வு தினம் பூமியின் சிறுநீரகமாய் நிற்கும் சதுப்பு நிலங்கள்

1 week ago 3

ஈரநிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் பிப்ரவரி 2ம்தேதி (இன்று) உலக சதுப்புநில தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1971ம் ஆண்டு ஈரான்நாட்டின் கபீரியன் கடற்பகுதியில் உள்ள ராம்சர் என்னும் நகரில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் ‘ராம்சர்ஒப்பந்தம்’ கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளே உலக சதுப்புநில பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மனித உடலை சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதேபோல் பூமியின் சிறுநீரகங்களாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. இவை மழைக்காலங்களில் நீரை சேமிப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. அதேபோல் வெள்ளத்தில் இருந்து சுற்றியுள்ள நிலப்பரப்பை காப்பாற்றுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய காரணியாக விளங்குவதும் சதுப்பு நிலங்கள் தான்.

அரியவகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் திகழ்கிறது சதுப்பு நிலங்கள். தற்போதைய நிலவரப்படி பூமியின் மொத்தப்பரப்பில் 6சதவீதம் சதுப்பு நிலங்கள் உள்ளன. இவை இயற்கையாக உருவானது, மனிதனால் உருவாக்கப்பட்டது என்று 2வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகள் மற்றும் ஆறுகள், நிலத்தடி நீர்நிலைகள் இயற்கையான சதுப்பு நிலங்களாகும். ஈரமான புல்வெளிகள், முற்றாத நிலக்கரி நிலங்கள், சோலைகள், முகத்துவாரங்கள், டெல்டாக்கள், அலையத்தி காடுகள் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்ட சதுப்பு நிலங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. பரப்பளவில் வெறும் 6சதவீதம் மட்டுமே இருந்தாலும் அனைத்து தாவரங்கள், விலங்குகள் வாழ்வதற்கு சதுப்பு நிலமே 40சதவீதம் காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சதுப்பு நிலங்களை அழியாமல் பாதுகாக்கவும், சீரழிந்த பகுதிகளை மீட்டெடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள இயற்கை வள மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: உவர்ப்பு நீர்நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர்தேங்கி நிற்கும் பகுதியே சதுப்பு நிலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும்துணை நிற்பதில் மிகவும் முக்கியத்துவம் கொண்டது சதுப்பு நிலங்கள். வலசைப்பறவைகள் அனைத்திற்கும் சதுப்பு நிலங்களே புகலிடமாக உள்ளது. உலகளவில் 1,950 சதுப்புநிலங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 25சதுப்பு நிலங்கள் தகுதி வாய்ந்தவை. தமிழகத்தை பொறுத்தவரை கோடியக்கரை, பழவேற்காடு போன்றவை பிரசித்தி பெற்ற சதுப்புநிலப்பகுதிகளாக உள்ளது. சதுப்புநிலங்கள் தான், இந்த பூமியின் இயற்கையான நீர்வடிகட்டிகளாக செயல்படுகின்றன. தண்ணீரிலிருந்து அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை அகற்றி தாவரங்கள், விலங்குள் மற்றும் மனிதர்களுக்கு உணவாக மாற்றுகின்றன.

கனரக உலோகங்கள், பாஸ்பரஸ் போன்ற மாசுபொருட்களை, நைட்ரஜன் வாயுவாக மாற்றுவதற்கு சதுப்பு நிலங்கள் உதவுகின்றன. அதிகப்படியான நீரை உறிஞ்சுதல், நீரோட்டத்தை குறைத்தல் போன்ற செயல்பாடுகள், வெள்ளப்பெருக்கு தாக்கங்களை குறைப்பதற்கு காரணமாக உள்ளது. மீன்பிடித்தல், வேட்டையாடுதல், பொழுதுபோக்கு என்று பொருளாதார மேம்பாட்டுக்கும் சதுப்பு நிலங்கள் பல்வேறு பகுதிகளில் வழிவகுத்து நிற்கிறது. இப்படி பல்வேறு முக்கியத்துவம் கொண்ட சதுப்புநிலங்கள், இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறையால் சீரழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சதுப்புநிலங்களில் மாசுக்கள் கலப்பது அதிகரித்து வருகிறது.

அதேபோல் ஆக்கிரமிப்புகளால் அவற்றின் பரப்பளவும் சிதைக்கப்பட்டு வருகிறது. 1970ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டும் பல்வேறு காரணங்களால் உலகளவில் 35சதவீத சதுப்பு நிலத்தை நாம் இழந்துள்ேளாம். தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையை மாற்றி, இயற்கையான சதுப்பு நிலங்களை கண்ணிமை போல் காக்க வேண்டும். இதற்கான உறுதியை இந்த நாளில் அனைவரும் ஏற்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினார்.

தமிழ்நாட்டில் ராம்சர் தளங்கள்
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சித்திரங்குடி, காஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம் ஆகிய 4சதுப்பு நிலக்காடுகளுக்கு ராம்சர் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளது. ராமநாதபுரம், மன்னார்வளைகுடா தீவுகள், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டிணம், திருவள்ளூர் மாவட்டங்களில் சதுப்பு நிலங்கள் அதிகளவில் உள்ளன. இதில் 13சதுப்பு நிலங்களை ராம்சர் தளங்களாக அறிவிப்பதற்கான முன்மொழிவை தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. இதில் பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி, பிச்சாவரம் சதுப்புநிலப்பகுதி, கரிகிலி பறவைகள் சரணாலயம் மற்றும் நீலகிரியில் உள்ள லாங்வுட் மற்றும் போன்றவை ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் இது 6சதவீதம்
சதுப்பு நிலம் என்பது கடல் மட்டத்தை விட குறைவான ஆழம் கொண்ட நீர்நிலை பகுதியாகும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மண் அரிப்பை தடுக்கவும், புயல்-சூறாவளி போன்ற இயற்ைக சீற்றங்களை மட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரிதும் துணை நிற்கிறது. பூமியின் மொத்த நிலப்பரப்பில், 6சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளது. இவற்றின் மொத்த நிலப்பரப்பு 20கோடி ஹெக்டேர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகளவில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் அமேசானை ஒட்டிய பிரேசில் பகுதிகளிலும் 1,112 சதுப்பு நிலப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை மொத்தமாக 89.37மில்லியன் ஹெக்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 3% குறைகிறது
சதுப்புநிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் என்பது பூமியில் வாழும் பல்வேறு உயிரினங்களின் பாதுகாப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இவற்றை ‘நகரங்களின் நுரையீரல்கள்’ என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் முன்பிருந்த சதுப்பு நிலங்களில் 50சதவீதம் மட்டுமே இப்ேபாது உள்ளது. இவற்றின் அளவும் ஆண்டு தோறும் 4ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என்ற அளவில் குறைந்து வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 3சதவீதம் சதுப்பு நிலங்கள் குறைந்து வருகிறது. இந்த நிலங்கள் தான் அப்பகுதி சார்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஊற்றுக்கண்ணாகவும் உள்ளது. எனவே சதுப்பு நிலங்களின் பரப்பு குறைவதை தவிர்க்க, பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் ஆதங்கமாக உள்ளது.

The post இன்று உலகளாவிய விழிப்புணர்வு தினம் பூமியின் சிறுநீரகமாய் நிற்கும் சதுப்பு நிலங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article