இன்று உலக வானொலி தினம்..!

3 hours ago 2

நவீன தகவல் தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பிருந்தே, மக்கள் தொடர்பு ஊடகத்தின் முன்னோடியாக வானொலி இருந்து வருகிறது. வானொலியை பொறுத்தவரையில் மின்வசதி கிடைக்கப்பெறாத பகுதி, மலை கிராமங்கள் என்று அனைத்து இடங்களிலும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. பேரிடர் காலங்களிலும் தடையின்றி இயங்க கூடியது வானொலி.

அதனால்தான், நவீன தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சி மற்றும் மின்னணு ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும், வானொலிக்கான மவுசு இன்றுவரை குறையவில்லை. படைப்பாற்றலை கொண்டாடும் சக்திவாய்ந்த ஊடகமாக வானொலி திகழ்கிறது.

இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப இளம் தலைமுறையினரின் கைகளில் ஆன்ட்ராய்டு செல்போன்கள்தான் தவழ்கின்றன. அவற்றிலும் வானொலி சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் இதே நாளில்தான் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. அதனால், அந்த தினம் உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இன்று (13-2-2025) உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வானொலி நிலையங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. பல்வேறு கல்வி நிறுவனங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு உலக வானொலி தினத்திற்கான கருப்பொருள் "வானொலியும் காலநிலை மாற்றமும்" என்பதாகும். இந்த முக்கியமான பிரச்சினை குறித்து வானொலி நிலையங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்வுகளும் ஒலிபரப்பப்படுகின்றன.

உலக வானொலி தினமான இன்று, நம்மை ஒன்றிணைத்து, நமது குரல்களை ஒலிக்கச் செய்து உலக நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கும் சக்திவாய்ந்த இந்த ஊடகத்தை கொண்டாடுவோம். வானொலியில் நமக்கு பிடித்தமான நிகழ்வுகளை கேட்டு மகிழ்வோம்!

Read Entire Article