
சிறுநீரக நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'உலக சிறுநீரக தினம்' இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இந்தியாவில் 10 லட்சம் பேரில் 800 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.
சிறுநீரக நோய் பாதிப்புகள் எந்த வயதிலும் உருவாகலாம். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை தொற்று உள்ளவர்கள் மற்றும் மரபணு ரீதியாகவும் சிறுநீரக நோய் பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரக பாதுகாப்பு தொடர்பாக உலகம் முழுவதும் முன்னெடுப்புகள் எடுத்து வரும் இந்த நாளில், சிறுநீரக நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை பார்ப்போம்.
* சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. பாதிப்பு தீவிரமாகும் போதுதான் அதன் அறிகுறிகளும் தீவிரமாக வெளிப்படுகின்றன.
* உடலில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்த நிலையில் அதிகமான சோர்வு, விவரிக்க முடியாத களைப்பு, கவனமின்மை, பசியின்மை, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், கணுக்கால் வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
* சிறுநீரகங்கள் சரியாக உள்ளனவா? என்பதை கண்டறியவும், சிறுநீரக பாதிப்புகளைத் தடுத்து அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மருத்துவர் ஆலோசனைப்படி ஆரம்ப நிலையிலேயே ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனைகள் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுநீரக செயல்பாட்டை முறையாக பராமரிப்பது அவசியமாகும்.
* நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியத்தை உரிய முறையில் பேணுவது அவசியம். நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலான வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான சீரான உணவு முறையை மேற்கொள்வதோடு, அவ்வப்போது உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவை பரிசோதித்து முறையாக பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது, புகைப்பழக்கத்தை கைவிடவேண்டும்.
* நாள்பட்ட மன அழுத்தம் சிறுநீரக நோய்க்கான ஆபத்து காரணியான உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது விளையாட்டுக்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. போதுமான தூக்கம் இல்லாவிட்டால் சிறுநீரக செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கிய நிலையிலும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, ஒவ்வொரு நாள் இரவும் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்குவது நல்லது.