இன்று அட்சய திரிதியை நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்: நள்ளிரவிலும் கடைகளை திறக்க ஏற்பாடு

2 weeks ago 4

சென்னை: அட்சய திரிதியை இன்று தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இன்று நள்ளிரவிலும் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தாண்டு அட்சய திரிதியை முன்னிட்டு கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீதம் விற்பனையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திரிதியையான வளர்பிறை திரிதியை ‘அட்சய திரிதியை’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் உள்ளிட்ட இதர விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அதன்படி இந்தாண்டு அட்சயதிரிதியை நேற்று மாலை 5:29 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் இன்று பிற்பகல் 2.12 மணி வரை இருக்கும். உதயதிதியின் அடிப்படையில் இன்று அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. இன்று காலை 5:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாகும்.

அட்சய திரிதியை முன்னிட்டு நகைக்கடைகளில் இன்று காலை முதல் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.8980க்கும், பவுன் ரூ.71,840க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஏனென்றால் நேற்று தங்கம் விலை ரூ.320 உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. குறிப்பாக, சென்னை தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வடபழனி, வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உட்பட பல இடங்களில் உள்ள நகைகடைகள் இன்று அதிகாலையே திறக்கப்பட்டன. காலை முதலே நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தை அதிகமாக காணமுடிந்தது. நேரம் ஆக, ஆக மேலும் கூட்டம் அதிகரித்தது.

மாலையில் இந்த கூட்டம் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஒவ்வொரு நகைக்கடைகள் முன்பாக மேளதாளங்கள் முழங்க, சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடைகள் முன்பாக அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

நகைக்கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முன்பண ரசீதை கொடுத்து தேர்வு செய்த நகைகளை வாங்கி சென்றனர். தங்கம் வாங்குவதற்கு முன்பதிவு செய்யாத மக்கள் காத்திருந்து தங்கத்தை தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் செய்கூலி, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி, தங்கம் நாணயம் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது. அட்சயதிரிதியை முன்னிட்டு நகைக் கடைகளில் புது, புது டிசைன்களில் தங்க நகைகள் விற்பனைக்காக வந்திருந்தது. எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்பட பல விதமான நகைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

இதில், தங்களுக்கு பிடித்த நகைகளை மக்கள்தேர்வு செய்து வாங்கி சென்றனர். அட்சயதிரிதியையான இன்று நிறைய பேர் நகை வாங்க ஆர்வம் காட்டினர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன்பதிவு என்பது 20 சதவீதம் அதிகமாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகை விற்பனை 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அட்சயதிரிதியை அன்று 25 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்ப னையானது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகை விற்பனை 20 சதவீதம் அதாவது 5 டன் கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளது. மொத்தமாக இன்று 30 டன் அளவுக்கு தங்கம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அட்சயதிரிதியை அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.54,160க்கு விற்கப்பட்டது.

தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.71,840க்கு விற்னையாகி வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் வசதிக்காக இன்று நள்ளிரவும் கடைகளை திறந்து வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நகைகடைகளில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஜார் வீதிகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட இன்று அதிகமாக காணப்பட்டது.

The post இன்று அட்சய திரிதியை நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்: நள்ளிரவிலும் கடைகளை திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article