இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க திட்டம்

2 hours ago 4

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும். அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திர குமார் போட்டியிட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில், கட்சியை பலப்படுத்துவது, சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, இரட்டை இலை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. தற்போது அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2026-ல் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வலுவான கூட்டணி அமைப்பது, இரட்டை இலை பிரச்சினையை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சியினர் அனைவரையும் தீவிரமாக பணியாற்றுமாறு அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து, கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article