27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

3 hours ago 2

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இருந்தாலும் தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குரல் ஒலிப்பது, ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகள் முழக்கமிடுவது, கட்சியின் அங்கீகாரம் பெற கூடுதல் இடங்கள் வேண்டும் என்று ம.தி.மு.க. குரல் எழுப்புவது போன்ற எதிர்ப்புகளும் தி.மு.க. கூட்டணியில் எழுந்துள்ளன. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்தகால தேர்தலை போலவே தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறது. அந்த கட்சியை கூட்டணிக்குள் இழுக்க ஏற்பட்ட முயற்சி தோல்வி அடைந்து விட்டன. நடிகர் விஜய்யின் த.வெ.க. தேர்தல் களத்திற்கு புதிது.

தி.மு.க.-பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கடந்த செயற்குழு கூட்டத்தில் விஜய் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அப்படியென்றால் அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரிகிறது.

ஆனால் விஜய்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று த.வெ.க. தெளிவாக கூறியுள்ளதால் அவர்கள் தலைமையில் புதிய அணி உருவாகத்தான் வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த கட்சி தங்களது தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.

பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகுதான் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறது என்பது தெளிவாக தெரியும். தே.மு.தி.க. தனது கூட்டணி முடிவை அடுத்த ஆண்டு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறது. தேர்தல் கூட்டணி கணக்குகள் ஒருபுறம் பரபரத்து கொண்டு இருந்தாலும், ஆளுங்கட்சியான தி.மு.க. தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது. '200 தொகுதிகளில் வெல்வோம்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார்.

இதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த சூழலில் தமிழக பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் மண்டல மாநாடு தமிழகத்தில் 7 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முதலாவதாக நெல்லையில் வருகிற ஆகஸ்டு 17-ந்தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக ஜூலை 26-ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Read Entire Article