ராமேசுவரம்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ளராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் நாள் பிறந்தார் அப்துல் கலாம். அவரின் முழு பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். ஒரு சகோதரி.
1958-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். அப்துல் கலாம், 1980-ம் ஆண்டு எஸ்எல்வி. ராக்கெட் திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டில் ரோகிணிசெயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்ற பிருத்வி, அக்னி, ஆகாஷ், நாக், திரிசூல் ஆகிய 5 ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் வெற்றிபெற்றன. அவரது தொடர்ச்சியான சாதனைகளால் இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்பட்டார். அவரது சாதனையின் உச்சமாக1998-ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.