இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்த வங்கி: ரூ.25.35 லட்சம் வழங்க உத்தரவு

1 day ago 4

தூத்துக்குடி: சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.25.35 லட்சம் நஷ்டஈடு வழங்கவும், புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை பொதுத்துறை வங்கி தள்ளுபடி செய்யுமாறும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அருணாசலம். தூத்துக்குடியில் செயல்படும் பொதுத்துறை வங்கியிடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய இவர், இதற்காக ஒரு லைப் இன்ஷ்யூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தினார். அதன்பிறகு உடல்நலம் சரியில்லாமல் அருணாசலம் இறந்து விட்டார். இதற்கான இழப்பீட்டு தொகையைத் தருவதோடு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவரது மனைவி கல்பனா அருணாசலம் பொதுத்துறை வங்கியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் வங்கி சரியான காரணங்களை கூறாமல் இவற்றைத் தர மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதன் பிறகும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர் சங்கர் ஆகியோர் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் காப்பீட்டுத் தொகையான ரூ.25 லட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை இரு மாதங்களில் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

The post இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்த வங்கி: ரூ.25.35 லட்சம் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article