
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்த செய்தியாளர் இந்தியாவில் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விளக்கப்படம் திரையிடப்பட்டது. அதில் 2001-ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2002-ல் நடந்த அக்ஷர்தாம் கோவில் தாக்குதல், 2008-ல் நடந்த மும்பை தாக்குதல், 2016-ல் நடந்த உரி தாக்குதல், 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதல் ஆகியவை திரையிட்டு காட்டப்பட்டன.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் சுமார் 250-க்கும் அதிகமான இந்திய மக்கள் உயிரிழந்துள்ளனர், 800-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும், 600-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 1,400-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது;-
"லக்ஷர்-இ-தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் மோசமான தாக்குதலை நடத்தினர். இதில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மும்பை தாக்குதலுக்கு பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும்.
அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே நெற்றியில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத ரீதியான மோதலை தூண்ட வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால் இந்திய அரசு மற்றும் இந்திய மக்களால் பயங்கரவாதிகளின் எண்ணம் நிறைவேறவில்லை.
டி.ஆர்.எப். அமைப்பு ஐ.நா.வால் தடை செய்யப்பட்டுள்ள லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் அங்கமாக இருக்கிறது. பஹல்காம் தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது பற்றிய தெளிவான உளவு தகவல்களை நாம் சேகரித்துள்ளோம்.
தங்கள் நாட்டில் பயங்கரவாதமே இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறுவது பொய் என்பதற்கான ஆதாரம் உள்ளது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த வேண்டியது அவசியம்.
பதினைந்து நாட்கள் கடந்தும், அதன் பகுதியில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புக்கு எதிராக பாகிஸ்தானிடமிருந்து எந்த வெளிப்படையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிற்கு எதிரான மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியது.
எனவே இன்று அதிகாலையில், இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா தனது எதிர்வினையாற்றும் உரிமையைப் பயன்படுத்தியது. பாகிஸ்தானில் 4 இடங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் காஷ்மீர் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரேஷி, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதில் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்ற முரிட்கேவும் அடங்கும். எந்த பாகிஸ்தான் ராணுவ நிலையும் குறிவைக்கப்படவில்லை. இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.
ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கதுவா, ஜம்மு பகுதியில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாகும். பதான்கோட் விமானப்படை தள முகாம் மீதான தாக்குதலை இந்த முகாம் திட்டமிட்டு இயக்கியது" என்று கூறினார்.
மேலும் பாகிஸ்தானுக்குள் 12-18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம் உட்பட அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை காட்டும் வீடியோக்களை அவர் வெளியிட்டார்.
இதையடுத்தும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன" என்று தெரிவித்தார்.