![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39082885-4.webp)
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதற்கிடையில் இவர் கடந்த 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். 2009-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பேட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானர். அப்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தினார்.
பின்னர் 2011-ம் ஆண்டு தனது கட்சியினை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார். ஒரு சில பிரச்சினைகளால் முழுமையாக அரசியலில் இருந்து விலகினார். அப்போதிலிருந்து, சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி 'பிரம்மானந்தம்' படத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, தனது அரசியல் வாழ்க்கை குறித்த பேசினார். நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். இனிமேல் நான் வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்து விலகி இருக்க போகிறேன். என் இதயத்திற்கு நெருக்கமான சினிமாவில் மட்டும் முழு கவனம் செலுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், எனது இலக்குகள் அனைத்துமே பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சு ஆந்திரா திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.