இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் ஆகம விதிகள் மீறல்: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம்

1 week ago 2

சென்னை: இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் பூஜை, தமிழ் ஆகமங்களுக்கு நேர் எதிரானது. முருகன் சிலையை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யாமல், அரசியலுக்காக பொருட்காட்சி பொம்மைபோல் வைத்து பூஜை செய்வது முருகக்கடவுளை இழிவு செய்வதாகும். மாநாட்டின் முருகன் சிலை ஆகம முறைப்படி உயிர் உண்டாக்கப்படாத பொம்மை மட்டுமே. உயிர் இல்லாத, சக்தி இல்லாத இந்து முன்னணியின் முருகன் பொம்மை சிலையை, மக்களை வணங்க வைப்பது பக்தியின் பெயரிலான மோசடி. ஆகமங்களின் மீதான நேரடி அத்துமீறல்.

ஆகமத்தின் பெயரால் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட இந்துக்களை அறுபடை வீடுகளில் பூஜை செய்யவிடாமல் தடுக்கும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யார்கள், குருக்கள் உள்ளிட்ட பார்ப்பன வைதீக சாதியினர், இந்து முன்னணி மாநாட்டில் ஆகம விதிகள் மீறப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பதேன்?தமிழ் கடவுள் முருகனின் வாகனமான யானையை மாற்றி, வள்ளி என்ற குறவர் சமூகப் பெண்ணை மணந்த சமத்துவ முருகனுக்கு பூணூலை மாட்டி, முருகன் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றி, தமிழர்களை அறுபடை வீடுகளில் இருந்து வெளியேற்றி, தமிழ் முருகனை சனாதன முருகனாக மாற்றி, முருகனையே களவாடிய கூட்டம் இன்று அரசியலுக்காக, மதவெறியை தூண்டி, மக்களிடையே பிளவை உருவாக்க முருக வேலை, சூலாயுதமாக மாற்றி, கையில் தூக்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆகம கோயில்களை எல்லாம், பார்ப்பனர்கள் நிரந்தரமாக கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. தொடர்ந்து அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராவதை தடுத்து வருகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

The post இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் ஆகம விதிகள் மீறல்: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article