கோவை: இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால், ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர். துறவு என்பது தனிப்பட்ட நிலையில் இருந்து முடிவு செய்வது. துறவு என்பது இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கம். கோவை ஈஷா யோக மையத்தில் துறவிகளாக உள்ள, தனது இரு மகள்களை மீ்ட்கக்கோரி, பேராசிரியர் காமராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், ஈஷா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து காணொலி காட்சி மூலம் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, 'தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சுய விருப்பத்தின் பேரிலேயே துறவிகளாக இருக்கிறோம்' என இருவரும் தெரிவித்தனர். உண்மையை தெரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாமே நடத்துவதாக அறிவித்தது. தற்போது, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.