
இஸ்லாமாபாத்,
ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான்(வயது 72) கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்டு இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என பி.டி.ஐ. கட்சி சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "போர் பதற்றம் காரணமாக அடியாலா சிறை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அரசியல் நோக்கம் கொண்ட வழக்குகள் காரணமாக நீண்டகாலமாக காவலில் வைக்கப்படுவது பி.டி.ஐ. கட்சி தலைவர் இம்ரான் கானின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
அத்தகைய தடுப்புக் காவலைத் தவிர்ப்பதற்காக பரோலில் விடுதலை செய்யும் தீர்வை அரசியலமைப்பு வழங்குகிறது. காவலில் இருந்தபோது இம்ரான் கான் சிறை விதிகளை மீறவில்லை. நீண்டகால சிறைவாசம் காரணமாக இம்ரான் கானின் உடல்நலம் மோசமடையும் அபாயம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானில் கடும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவி வருவதாகவும், இம்ரான் கானை விரைவில் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வரும் தேதி குறித்த அறிவிப்பை கோர்ட்டு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.