இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது. இதில் 9 தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட 7 கூட்டுக்குழுவை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் அமைத்தது.
இந்த 7 குழுக்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று இந்தியா தரப்பு நியாயங்களை எடுத்துக்கூற உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ள பாகிஸ்தான் அவர்கள் தரப்பு நியாயத்தை உலகுக்கு எடுத்துக்கூற தூதுக்குழுவை அமைத்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று வெளியிட்டார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் எரிசக்தி அமைச்சர் முசாதிக் மாலிக் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் குர்ராம் தஸ்த்கீர் கான், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரஸ்ஸல்ஸ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது.
The post இந்தியாவுக்கு போட்டியாக பாக்.கும் உலக நாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்புகிறது: தீவிரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை விளக்க திட்டம் appeared first on Dinakaran.