
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சீனா டிரோன்களை உருவாக்க தொடங்கி விட்டது. அது உலகம் முழுவதும் போர்முறையில் புரட்சியை உருவாக்கி விட்டது. டிரோன் தயாரிப்பில் போட்டியிடுவதற்கு இந்தியா வியூகம் வகுக்க வேண்டும். போர்முறையில் டிரோன்கள் புரட்சியை ஏற்படுத்தி விட்டன. முன்எப்போதும் இல்லாத வழிகளில் போர்க்களத்தை உளவுபார்க்கவும், தகவல் தெரிவிக்கவும் செய்கின்றன. டிரோன்கள் என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல. வலிமையான தொழில்துறை கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பு.
ஆனால் பிரதமர் மோடி இதை உணர்ந்துகொள்ள தவறி விட்டார். அவர் 'டெலிபிராம்டர்' உதவியுடன் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, நமது போட்டி நாடுகள் புதிய தொழில்நுட்பங்களில் நிபுணர்களாகி விட்டன. எனவே, இந்தியாவுக்கு தேவை வலுவான தொழில் அடித்தளம்தான், வெற்று வார்த்தைகள் அல்ல.இந்தியாவிடம் அளப்பறிய திறமை, உந்துதல் இருக்கின்றன.ஆனால், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தெளிவான தொலைநோக்கு பார்வைதான் வேண்டும். உண்மையான தொழில்துறை திறமையை கட்டமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.