லண்டன்: இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 251 ரன்களுடன் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஜோ ரூட் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார். இந்நிலையில் இன்று போட்டியின் 2வது நாள் தொடங்கியது. இதில் ஜோ ரூட் பவுண்டரி அடித்து 37வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இவரது 8வது சதம் இதுவாகும். இந்த சதத்துடன் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின்(11 சதம், 46 இன்னிங்ஸ்) சாதனையையும் ஜோ ரூட் சமன்(11 சதம், 60 இன்னிங்ஸ்) செய்துள்ளார்.
The post இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! appeared first on Dinakaran.