புதுடெல்லி,
நாடு முழுவதும் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை வனப்பகுதி மற்றும் மரங்கள் வளரும் பரப்பளவு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதில் மேற்படி காலகட்டத்தில் நாட்டின் வனப்பகுதி மற்றும் மரங்கள் வளரும் பரப்பளவு 1,445 சதுர கி.மீ. அளவுக்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அந்தவகையில் 2021-ம் ஆண்டு 7,13,789 சதுர கி.மீ. ஆக இருந்த வனப்பகுதியின் பரப்பு 2023-ல் 7,15,343 சதுர கி.மீ. ஆக அதிகரித்து இருக்கிறது. இதைப்போல மரங்கள் வளரும் பரப்பளவும் 1,289 சதுர கி.மீ.க்கு மேல் அதிகரித்து இருக்கிறது. மொத்தமாக வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு இந்த காலகட்டத்தில் 1,445 சதுர கி.மீ. அதிகரித்து மொத்தம் 8,27,357 சதுர கி.மீ.யாக உள்ளது. இது நாட்டின் நிலப்பகுதியில் 25.17 சதவீதம் என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பின் மூலம் கூடுதலாக 229 கோடி டன் கார்பனை உறிஞ்சும் திறன் அதிகரித்து உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.