இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது; துணை ஜனாதிபதிக்கு திமுக பதிலடி

1 day ago 1

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.

அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், கவர்னரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மசோதாக்களை கிடப்பில் போடும் கவர்னர்களுக்கு கடிவாளம் போடும் வகையிலான இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

அதைப்போல ஜனாதிபதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தல்களை வழங்கியது அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.ஆனால் ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியதை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக சாடினார். மாநிலங்களவை பயிற்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் இருக்கிறார்கள். நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்பதால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி இருக்கிறது. அது நீதித்துறையிடம் எப்போதும் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?

இதில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா, இல்லையா? என்பதற்கான கேள்வி அல்ல. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதி அறிவுறுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது. என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தை பார்ப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை.

இந்திய ஜனாதிபதி, மிகவும் உயர்ந்த ஒரு பதவி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், பராமரிப்பதாகவும் கூறி அவர் பதவியேற்கிறார். துணை ஜனாதிபதி, மந்திரிகள் உள்ளிட்ட நாடாளுமன்றவாதிகள் மற்றும் நீதிபதிகள், அந்த அரசியல் சாசனத்துக்கு அடிபணிவதாக உறுதியேற்று பதவி ஏற்கிறார்கள். எந்த அடிப்படையிலும் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தும் நிலை இருக்கக்கூடாது. அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. அதுவும் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதில் இருக்க வேண்டும்.

செயல்முறையில் பொறுப்புக்கூறல் கொள்கை உள்ளது. நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஆனால் நீதித்துறையால் நிர்வாகம் நடத்தப்படுமானால், நீங்கள் எப்படி கேள்விகள் கேட்பீர்கள்? தேர்தல்களில் யாரை நீங்கள் பொறுப்பேற்க வைப்பீர்கள்?

நமது மூன்று நிறுவனங்களான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்பு மலர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒன்று மற்றொன்றின் களத்தில் ஊடுருவினால் அது ஒரு சவாலை ஏற்படுத்தும். அது நல்லதல்ல. இவ்வாறு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆவேசமாக பேசினார்.

இந்தநிலையில், ஜகதீப் தன்கரின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.

கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதியின் பங்கு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்த துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

Under the seperation of powers as per the constitution the executive, legislative and judiciary have distinct powers . When all three act on their own spheres one should not forget that constitution is supreme . The recent Supreme Court verdict on the role of Governors and… pic.twitter.com/69pp190LkR

— Tiruchi Siva (@tiruchisiva) April 17, 2025

Read Entire Article