புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதால் பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்றான செனாப் ஆறு முற்றிலும் வற்றிப் போயுள்ளது. இதன் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. இதில், 60 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.
இதுதொடர்பாக கடந்த மாதம் 26ம் தேதி முறைப்படி பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது. உடனடியாக சிந்து நதியில் அனுமதிக்கப்படும் தண்ணீர் அளவை இந்தியா குறைத்தது. இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்நிலையில், தண்ணீர் குறைக்கப்பட்ட 4 நாளில் தற்போது பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்றான செனாப் ஆறு வற்றிப் போயுள்ளது.
ஏப்ரல் 26ம் தேதி அங்கே தண்ணீர் ஓடிய நிலையில் ஏப்ரல் 29ம் தேதி தண்ணீர் இன்றி வற்றிய செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த செயற்கைகோள் புகைப்படங்களில் சியால்கோட்டில் பாயும் செனாப் நதி முற்றிலுமாக வற்றி நீர் இன்றி காணப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த நதியை நம்பி இருப்பவர்கள் தண்ணீருக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
The post இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானின் செனாப் ஆறு முற்றிலும் வற்றிப் போனது: செயற்கைகோள் புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.