இந்தியா - வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: பரபரப்பான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம்

3 months ago 27

கான்பூர்,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கியது. டெஸ்ட் கிரிக்கெடில் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்தியா அதிவேக 50, 100, 150 மற்றும் 200 ரன்களை கடந்து உலக சாதனை படைத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்காளதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் அடித்தனர். வங்காளதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 52 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஹசன் மக்மூத் 4 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் வங்காளதேச அணியை விரைவில் ஆல் அவுட்டாக்கி வெற்றி பெற இந்தியா முயற்சிக்கும், அதே வேளையில் டிரா செய்ய வங்காளதேசம் போராடும் என்பதால் இந்த டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article