இந்தியா- மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி

5 hours ago 3

இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மியான்மரில் 2021ல் ராணுவம் ஆட்சிக்கு வந்த பின்னர், பல இடங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. அது இந்திய எல்லை பகுதிக்கும் பரவியுள்ளது. இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் வாழும் மக்கள், இனம் மற்றும் கலாச்சார ரீதியாக நெருங்கி இருந்தாலும், அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளனர். மியான்மர் எல்லையானது, போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இது இந்திய எல்லையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. இந்நிலையில், இந்தியா-மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவு துறைக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ கிழக்கு கமாண்ட் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ், அசாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இந்தியா- மியான்மர் எல்லை பகுதியில், மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தின் நியூ சம்டால் கிராமம் அருகே பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தேடுதல் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டன. பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

The post இந்தியா- மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article