
வாஷிங்டன்,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்களின் விவேகம் பாராட்டுக்குரியது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"கடந்த 48 மணி நேரமாக நானும், துணை ஜனாதிபதி வான்ஸும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அசீம் மாலிக் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதையும், நடுநிலையான தளத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைதி பாதையைத் தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஷெரீப்பின் ஞானம், விவேகம் மற்றும் அரசியல் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.