இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

3 months ago 27

புதுடெல்லி: இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்தவர் சீதாராம் யெச்சூரி என்று டெல்லியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினார்கள். மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த செப்.12ம் தேதி காலமானார். அவருக்கு நேற்று டெல்லியில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி)யின் சுப்ரியா சுலே, ஜேஎம்எம் கட்சியின் மஹுவா மாஜி, ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி தேவராஜன் ஆகியோர் இரங்கல் கூட்டத்தில் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக், சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், தி இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் ஆகியோரும் பேசினர். அப்போது அனைவரும் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்தவர் சீதாராம் யெச்சூரி என்று புகழாரம் சூட்டினர்.

அரசியலை இயக்கியவர் ராகுல்காந்தி புகழாரம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசுகையில்,’ என்னைப்பொறுத்தவரையில் சீதாராம் யெச்சூரி அரசியலை இயக்கிய நண்பர். நான் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே யெச்சூரியைப் பார்த்தேன். அவரை மிகவும் கவனமாகக் கவனித்தேன். நான் கண்டுபிடித்தது நெகிழ்வான மற்றும் கேட்கும் ஒருவரைதான். அவர் ஒரு வகையில் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் பாலமாக இருந்தார். பல அரசியல்வாதிகளிடம் இருக்கும் பொதுவான பண்புகளான கோபம், ஆக்ரோஷம் மற்றும் திமிர் போன்றவற்றை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் நீங்கள் நம்பக்கூடிய ஒரு நபராக இருந்தார். மேலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக அழுத்தங்கள் இருக்கும் இன்றைய சூழலில் விட்டுக்கொடுப்பது எளிது. அவர் என்ன செய்தாலும், அவர் எப்போதும் நம் நாட்டின் நலனுக்காகவே செயல்பட்டார். ஒவ்வொரு முறையும் அவரது தொடக்கப் புள்ளி இந்தியாதான்’ என்றார்.

The post இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article