‘இந்தியா’ கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது: சிவசேனாவின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு

3 hours ago 3

மும்பை: இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது என்று சிவசேனாவின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்கானது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற யூகத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், ‘இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது தேசிய பிரச்னை மற்றும் மக்களவை தேர்தலை முன்வைத்து அமைந்திருந்தது. மாநில தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாக போட்டியிடுவதா என இன்னும் சில நாட்களில் அனைவருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

கூட்டணிக்குள் நாங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருக்கிறோம்’ என்றார். மேலும் டெல்லி தேர்தல் குறித்து கூறுகையில், டெல்லி சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நாம் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்பதே எனது கருத்து என்றார். இந்தியா கூட்டணி குறித்து அதில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர் சரத் பவாரின் இந்த கருத்து, மகா விகாஸ் அகாடியில் அங்கம் வகிக்கும் உத்தவ் அணி சிவசேனா, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்த சில நாட்களுக்கு பின்பு வந்துள்ளது.

கடந்த 1970களில் இருந்து பிஎம்சி.யை (பிரிக்கப்படாதது) சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகா விகாஸ் அகாடி தோல்வியை தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போதைய இந்த போக்கு கூட்டணியின் ஒற்றுமை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை சாத்தியமாக்கிய கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கும் முடிவை எடுக்க சிவசேனா தலைவர்களை தூண்டியுள்ளது.

* அமித்ஷா விமர்சனத்திற்கு சரத் பவார் பதில்
மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘1978ம் ஆண்டு தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல், 2024 மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது என்றார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில், ‘நான் 1978ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன். அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்கு தெரியாது.

நான் முதல்வராக இருந்தபோது, ஜன சங்கத்தை சேர்ந்த உத்தமராவ் பாட்டீல் போன்றவர்கள் (பாஜவின் முன்னோடிகள்) எனது அமைச்சரவையில் இடம் பிடித்தனர். அரசியல் தலைவர்களிடையே நல்ல தொடர்பு இருந்தது. தற்போது அது இல்லை’ என்றார். இதற்கு சான்றாக 2001ம் ஆண்டு புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, வாஜ்பாய் தன்னை பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார் என சரத் பவார் தெரிவித்தார்.

The post ‘இந்தியா’ கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது: சிவசேனாவின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article