இந்தியா-கனடா உறவில் பாதிப்பு; ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் - வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு

3 months ago 21

புதுடெல்லி,

கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்குப்பின்னால் இந்தியாவின் சதி இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசாங்கம், இதற்கான ஆதாரத்தை வழங்குமாறு கனடா அரசை வலியுறுத்தியது. ஆனால் கனடா அரசு இது தொடர்பான ஆதாராங்கள் எதையும் வழங்கவில்லை. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் சர்மா மற்றும் சில தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கனடா அரசு திட்டமிட்டு இருந்தது. கனடாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் மற்றும் விசாரணைக்கு இலக்காகி இருக்கும் பிற தூதரக அதிகாரிகளை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த விளக்கத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டை முன்வைத்தேன். இதில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கனடா பிரதமரின் விளக்கம் இந்தியா இதுவரை கூறி வந்ததை உறுதிப்படுத்துகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடா பிரதமர் கூறியதாக நாம் கேள்விப்பட்டவை, இதுவரை நாம் தொடர்ந்து கூறி வருவதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா அரசு இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்தியா-கனடா உறவுகளில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணம்" என்று தெரிவித்துள்ளார். 

Our response to media queries regarding PM of Canada's deposition at the Commission of Inquiry: https://t.co/JI4qE3YK39 pic.twitter.com/1W8mel5DJe

— Randhir Jaiswal (@MEAIndia) October 16, 2024


Read Entire Article