இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

13 hours ago 4

வாஷிங்டன்,

உக்ரைன் -ரஷியா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா உடன்படவில்லை என்றால் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.

இதனிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் லிண்ட்சே கிரகாம் எம்.பி. தாக்கல் செய்தார்.

இது இந்தியாவுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அமெரிக்காவிடம் மத்திய அரசு கவலை தெரிவித்து இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் இந்திய நலனைப் பாதிக்குமா? என்பதை கவனித்து வருகிறோம். அப்படி இந்திய நலனை பாதிப்பதாக இருந்தால் அமெரிக்காவுடன் பேசி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினையில் கிரகாம் எம்.பி.யுடன் இந்திய தூதரகமும், அதிகாரிகளும் தொடர்பில் இருக்கிறது' என்று கூறினார்.

மேலும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் நமது கவலைகள் மற்றும் நலன்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Read Entire Article