இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு : நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்; அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

3 hours ago 2

டெல்லி : அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது.இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், தலைநகர் டெல்லியில் அமெரிக்க விமானத்தை தரையிறக்காமல், பஞ்சாபில் தரையிறக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இதனிடையே அதனை உறுதி செய்யும் விதமாக, இந்தியர்களுக்கு விலங்கு போட்ட வீடியோவை வெளியிட்டது அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படை.சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்பி இருப்பதாக அமெரிக்க எல்லை காவல் படைத் தலைவர் மைக்கேல் டபிள்யூ. பேங்க்ஸ் அறிவித்துள்ளார். தொலைதூர நாடான இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் மக்களை அனுப்பி வைத்துள்ளதாக மைக்கேல் டபிள்யூ. பேங்க்ஸ் பெருமிதம் தெரிவித்தார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் அமெரிக்காவின் உறுதியை தங்கள் நடவடிக்கை பறைசாற்றுவதாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மைக்கேல் டபிள்யூ. பேங்க்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு : நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்; அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! appeared first on Dinakaran.

Read Entire Article