இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி ஒத்திகை: விண்ணில் சீறிப் பாய்ந்த விமானங்கள்

3 months ago 21

சென்னை: இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் நேற்று போர் விமான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதை அனுசரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படை 1.70 லட்சம் வீரர்களை கொண்டுள்ளது. 1,130 போர் விமானங்களும், 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் நமது போர்ப்படையில் உள்ளன. விமானப்படையை நிறுவிய தினத்தை அனுசரிக்கும் வகையில் இந்தாண்டு ‘ஏர் ஷோ’ என அழைப்படும் பிரம்மாண்டமான வான் வழி சாகச நிகழ்ச்சியை சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி நிகழ்த்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் நாட்டின் வான் வழியை பாதுகாப்பதில் விமானப் படையின் அசைக்க முடியாத வீரத்தையும் உறுதிபாட்டையும் எடுத்துக்காட்டும் வகையில் ஏராளமான வான் வழி சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பெருமை வாய்ந்த பழங்கால விமானங்கள் உள்ளிட்டவை பங்காற்ற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அதேபோல், இலவசமாக மக்கள் சாகச நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கபட உள்ளதால் அன்றைய தினம் மெரினா கடற்கரைக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நேற்று மெரினா கடற்கரையில் மதியம் 1.10 மணி முதல் 1.45 மணி வரை நடத்தப்பட்டன. இதில், விமான படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டன.

விண்ணை பிளந்து வீறுகொண்டு பறந்த விமானங்களை மெரினா கடற்கரையில் இருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடத்தப்படுவதால் பாதுகாப்பு நலன் கருதி சென்னை மாநகரம் சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி ஒத்திகை: விண்ணில் சீறிப் பாய்ந்த விமானங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article